கடன் வாங்க வேண்டுமா? உங்க சிபில் ஸ்கோர் என்ன? என்பதே முதல் கேள்வியாக உள்ளது. ஆமாம் சார் உங்க சிபில் ஸ்கோர் கொஞ்சம் குறைவா தான் இருக்கு, பார்க்கலாம் இருங்க..... இது போன்ற பதில்களை நம்மில் பலர் கேட்டிருக்கலாம். ஆனால் இன்றளவும் அதை எப்படி பார்ப்பது? எப்படி நம்முடைய ஸ்கோரை அதிகரிப்பது என்று தெரியாமலேயே இருக்கிறோம்.
Credit Information Bureau (India) Limited. இது, கடன் பெறுவோர் பற்றிய இந்தியாவின் முதல் தகவல் நிறுவனம். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், தங்களிடம் கடம் பெறுவோர் பற்றிய விவரங்களை ஒவ்வொரு மாதமும் ( சில வங்கிகள் 60 நாட்களுக்கொரு முறை ) சிபில் நிறுவனத்தில் அப்டேட் செய்யும். சிபில் போன்று மேலும் சில அமைப்புகள் இருந்தாலும், வங்கிகள் சிபில் ரேட்டிங்கிற்கே முக்கியத்துவம் தருகின்றன.
என்னென்ன விவரங்கள் இருக்கும்:
வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ வாங்கியுள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு, தொழிற் கடன் உள்ளிட்ட பல கடன் சம்பந்தபட்ட அனைத்து விவரங்களும், அதை பெற்றுக் கொண்டவர்களின் விவரங்களும் சிபிலில் இருக்கும். குறிப்பாக வாங்கிய கடன் தொகை, கட்ட வேண்டிய தொகை, எவ்வளவு நாட்களில் கட்டியுள்ளார்கள், சரியான நேரத்தில் கட்டிவிட்டார்களா? கட்டி முடித்து விட்டார்களா இல்லையா? வாராக்கடன் ஏதும் உள்ளதா போன்றவை அடங்கி இருக்கும்.
இதனால் என்ன பயன்:
நீங்கள் க்ரெடிட் கார்ட் அல்லது வேறு வகைக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் உங்கள் விவரங்களை வைத்து CIBIL பதிவுகளை சோதிக்கும். சிபிலில் உங்கள் ஸ்கோர் எவ்வளவு, உங்களின் கடன் விவரங்கள், அவற்றை திருப்பி செலுத்தி இருக்கும் விதம் ஆகியவற்றை பார்த்துவிட்டு உங்களுக்கு க்ரெடிட் கார்ட் அல்லது கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இதன் மூலம் குறிப்பிட்ட நபர்களுக்கு கடன் கொடுத்து, அதை வசூலிக்கும் பிரச்சனையை வங்கிகள் தவிர்க்க முடியும். கிரெடிட் கார்டை பயன்படுத்துவது எப்படி என்று அறியவும்.
சிபில் ஸ்கோர் எப்படி உயர்த்துவது:
இதுவரை கடன் பெறாதவர் என்றால், உங்கள் வருமானத்தின் அடிப்படையில் க்ரெடிட் கார்ட் அல்லது சிறிய தொகையில் கடன் பெற்று அதைச் சரியாக திருப்பிச் செலுத்துங்கள்.
ஏற்கனவே வாங்கிய கடன்களில் நிலுவைத் தொகை இருந்தால் அதை முழுமையாக செலுத்தி விடுங்கள். குறைவான CIBIL Score இருப்பவர்களுக்கும் சில தனியார் நிதி நிறுவங்கள் சிறிய அளவில் கடன் கொடுக்கின்றன. வட்டி சற்றுக் கூடுதலாகத்தான் இருக்கும். அவர்களிடம் கடன் பெற்று தாமதமில்லாமல் சரியாக மாதத் தவணையைக் கட்ட வேண்டும்.
நகைக்கடன் போன்றவையும் இதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான வங்கிகள், தங்களிடம் Fixed Deposit வைத்திருப்பவர்களுக்கு, அதை உத்தரவாதமாக வைத்துக் கொண்டு பிக்சட் டெபாசிட் தொகையில் 70 சதவிகிதம் வரை க்ரெடிட் லிமிட் வைத்து க்ரெடிட் கார்டுகளை தருகின்றன. ஒவ்வொரு மாதமும் மிகக் குறைந்த அளவு செலவளித்து அதை சரியாக திருப்பிச் செலுத்துவதன் மூலம் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம். எந்தக் காரணம் கொண்டும் இதிலும் தாமதமாக மாதத் தவணைக் கட்டக்கூடாது.
அடமானக் கடன் மற்றும் அடமானமற்றக் கடன் என்ற கலவையில் கடன் பெற்று அதை முறையாக திருப்பிச் செலுத்துவதன் மூலமும் சிபில் ஸ்கோரை எளிதில் அதிகரிக்கலாம்.
CIBIL Score குறைவதற்கான காரணங்கள்:
• பொதுவாக, Credit Card உபயோகமே சிபில் ஸ்கோரை உயர்த்தியும், தாழ்த்தியும் காட்ட வல்லது. எனவே, கிரெடிட் கார்டு வரம்பைவிட 30% அதிகமாக உபயோகித்தால் உங்களுடைய ஸ்கோர் குறைய வாய்ப்புண்டு.
• ஒரே நேரத்தில் அதிகமாகக் கடன்கள் மற்றும் Credit Card வைத்திருப்பதும் ஸ்கோர் குறைவதற்கான காரணமாகும்.
• கிரெடிட் கார்டில் கட்ட வேண்டிய முழுத் தொகையை மாதந்தோறும் செலுத்தாமல், ஒரு பகுதியை (Part Payment) மட்டும் செலுத்துவதும் ஸ்கோர் குறைவதற்கான காரணமாகும்.
• நம் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துகிற மாதத் தவணைகளைத் தாமதமாகச் செலுத்துவதும் ஸ்கோர் குறைவதற்குக் காரணமாகிறது.
ஆக மொத்தத்தில், நாம் கடனுக்கான மாதத் தவணை அல்லது கிரெடிட் கார்டுக்குள்ள முழுத்தொகையையும் சரியாகச் செலுத்தாமல் இருப்பது நம் கிரெடிட் கார்டு ஸ்கோரை வெகுவாகப் பாதிக்கும்.
என்னென்ன தகவல்கள் இடம் பெறும்:
Credit Card அல்லது மற்ற வகைக் கடன் பெறுவோரின் தனிப்பட்ட தகவல்கள், கடன் வகை, கடன் தொகை, கடன் செலுத்த வேண்டிய காலம், ஒவ்வொரு மாதமும் சரியாக கடன் செலுத்தி இருக்கிறார்களா அல்லது எத்தனை நாள் தாமதமாக செலுத்தி இருக்கிறார்கள் ஆகிய விவரங்களுடன் கடனை கட்டி முடித்து விட்டார்களா அல்லது செட்டில்மெண்ட் அல்லது வராக்கடன் ஆகியவை பற்றிய தகவல்களுல் இடம் பெறும்.
ஸ்கோர் எவ்வளவு இருந்தால் கடன் கிடைக்கும்:
சிபில் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும். பொதுவாக 700க்கும் மேல் சிபில் ஸ்கோர் இருப்பவர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும். வட்டியும் குறைவாக இருக்கும். 700க்கும் கீழ் ஸ்கோர் இருப்பவர்களுக்கு கடன் கிடைப்பது கடினம். மேலும் அப்படியே கொடுத்தாலும் வட்டி அதிக அளவில் இருக்கும்.
சிபில் ஸ்கோர் தெரிந்துக் கொள்வது எப்படி:
சிபில் இணையதளத்திற்கு சென்று தெரிந்துக் கொள்ளலாம். ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக பார்த்துக் கொள்ளலாம். மேலும் பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளலாம். விவரங்கள் சரியாக இருக்கின்றனவா என்றும் பார்த்துக் கொள்ளலாம்.
கண்காணிப்பு:
சிபில் அமைப்பு, வங்கிக் கடனை (Loan)திருப்பிச் செலுத்துவதை மட்டும் ஆராய்வதில்லை. வங்கிகளில் கடந்த காலங்களில் நீங்கள் காலம் தாழ்த்தி தொகை செலுத்திய நிகழ்வுகள், கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பிய நிகழ்வுகள், பிற கடன் திட்டங்கள் அதாவது நகைக்கடன், கல்விக்கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை வங்கிகளிடமிருந்து பெற்று உங்களைப் பற்றி மதிப்பிட்டு கிரெடிட் ஸ்கோர் வழங்குகிறது. இந்த மதிப்பெண் குறித்த விவரங்கள் உங்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. இந்த விவரங்கள் தேவைப்படும் வங்கிகளுக்கு மட்டும் ரகசியமாக வழங்கப்படுகிறது.
இப்படிதான் நடக்கிறது:
ஒரு வாடிக்கையாளர் எந்தவிதமான கடனை வாங்கியிருந்தாலும், கடனுக்கான EMI தொகையைச் சரியான தேதியில் திரும்பச் செலுத்துகிறாரா என்பதன் அடிப்படையில் Credit Score வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதியில் கடனுக்கான EMI தொகையை ஒருமுறை சரியாகச் செலுத்தவில்லை என்றால்கூட அதனுடைய பாதிப்பு கிரெடிட் ஸ்கோரில் பிரதிபலிக்கும்.
உதாரணமாக, நீங்கள் ஏதாவதொரு வங்கியில் கார் வாங்கக் கடன் பெற்றீர்கள் என்றால், உங்களின் கடன் திருப்பிச் செலுத்தும் சக்தி, தவணை தவறாமல் கடனைத் செலுத்திய விவரம், கடன் குறித்த விவரங்கள் ஆகியவற்றை அந்த வங்கி CIBIL அமைப்புக்கு வழங்கும்.
அவர்கள் இதற்கான கணினி மென்பொருளைப் பயன்படுத்தி உங்களுக்கு ஒரு குறியீட்டெண் வழங்குவார்கள். நீங்கள் தவணை தவறாமல் செலுத்தியிருந்தால், உங்கள் கடன் குறியீடு நல்ல நிலையைக் காட்டும். அதே நேரத்தில், தவணை செலுத்தியதில் ஏதாவது குறைகள் இருந்தால் உங்கள் கடந்த கால நிலை குறித்து உங்கள் கடன் குறியீடு சற்று மதிப்பு குறைந்து காட்டும். இதனால் உங்களுக்குக் கடன் வழங்குவதில் வங்கிகள் சுணக்கம் காட்டக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
கடனை முடித்த பிறகு சரிபார்த்தல் அவசியம்:
ஏதாவது பெரிய வங்கிக் கடனை நீங்கள் முழுவதுமாகச் செலுத்தி விட்டீர்கள் என்றால் www.cibil.com என்ற வலைதளத்துக்குச் சென்று உங்கள் சிபில் மதிப்பெண் என்னவாக இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளுங்கள். அது மிகவும் குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால் இது குறித்து உங்கள் வங்கியின் மூலம் சிபில் அமைப்பை அணுகி நீங்கள் தீர்வு பெறலாம். இந்தப் பிரச்னையைச் சரிசெய்த பிறகு, அடுத்த கடனுக்காக நிதி நிறுவனங்களை நாடுவதுதான் புத்திசாலித்தனம்.
கிரெடிட் ஸ்கோர் தெரிந்து கொள்வது எப்படி:
www.cibil.com என்கிற இணையதளத்துக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம். https://www.cibil.com/creditscore/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து சிபில் ஸ்கோரை தெரிந்து கொள்ளலாம். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும். கடன் கேட்டு வங்கியை அணுகுவதற்கு முன்பு, ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் கட்டாயம் கிரெடிட் ஸ்கோர் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.