TDS என்றால் என்ன? What Is Tax Deduction at Source & Details In Tamil.

இந்தியாவில் வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source) என்பது இந்திய வருமானவரிச் சட்டம், 1961-இன்படி உரிய நபர்களால், உரிய நபர்களின் வருவாய் ஆதாரத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடு தொகையை முன்கூட்டியே  பிடித்தம் செய்வதாகும்.

வருமானவரி பிடித்த திட்டத்தின் மூலம்  நிலையான வருவாய் ஈட்ட வழிவகுக்கிறது. இம்முறையானது வரி ஏய்ப்பை தடுப்பதுடன் வரி அமைப்பை விரிவடையச் செய்கிறது. வருமானவரி பிடித்தம் செய்தவர் அத்தொகையினை ஏழு நாட்களுக்குள் அல்லது அந்தந்த மாத இறுதிக்குள் வருமானவரி துறையினரிடம் செலுத்த கடமைப்பட்டவர்கள் ஆகின்றனர்.

ஆண்டு இறுதியில் செலுத்த வேண்டிய வருமானவரிக்கு கூடுதலாக வருமானவரி பிடித்தம் இருப்பின் அதனை வருமானவரி துறைக்கு, அதற்குரிய படிவத்தை அனுப்பி திரும்பப் பெறலாம்.


TDS சான்றிதழ்: 

 சம்பளம் வாங்குவோருக்கு படிவம் 16: சம்பளம் வாங்குவோர் என்றால் வரி கணக்கீடு விவரங்கள், கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் அடங்கிய படிவம் 16ல் சான்றிதல் வழங்க வேண்டும். 

சுயதொழில் செய்வோர்: 

சுயதொழில் செய்பவர்களுக்கு படிவம் 16 ஏ: சுயதொழில் செய்பவர்கள் கழிக்கப்படும் வரி மற்றும் செலுத்திய வரி விவரங்கள் கொண்ட படிவம் 16ஏ-ல் சான்றிதல் வழங்க வேண்டும். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித் தனி சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

 TDS விகிதங்கள் சம்பளம்:

 சம்பளம் மூலம் ஆண்டு வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டு பின்னர் பணியாளர் செலுத்த வேண்டிய வரி அந்த ஆண்டுக்கு கணக்கிட வேண்டும் பிறகு வரி சராசரி விகிதத்தில் இருந்து கழிக்கப்பட வேண்டும். உதாரணமாக செலுத்த வேண்டிய வரி ஆண்டுக்கு ரூ. 24,000 என்றால் ஒவ்வொரு மாதமும் ரூ. 2000 கழிக்கப்படும்.

PAN விவரங்கள் இல்லை என்றால் TDS விகிதம்:

உங்கள் PAN விவரங்கள் உங்கள் நிதியாளருடன் பகிர்ந்து கொள்ளப்படவில்லை எனில், கழிக்கப்பட்ட TDS 20% நீங்கள் ஒரு இந்திய குடியிருப்பாளராக இருந்தால் நீங்கள் ஒரு குடியுரிமை இல்லாத இந்திய வாடிக்கையாளராக இருந்தால் 30% மற்றும் பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணம் மற்றும் வரி செலுத்த வேண்டும்.


TDS தள்ளுபடிக்கான அறிவிப்பு: 

நீங்கள் ஒரு இந்திய குடியுரிமை வாடிக்கையாளராக இருந்தால், நிதி ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் நிதியாளரிடம் படிவம் 15G அல்லது படிவம் 15H ஆகியவை சமர்ப்பிப்பதன் மூலம் (உங்கள் வயதிற்கு ஏற்ப பொருந்தும்) நிலையான வைப்புத் தொகையிலிருந்து பெறப்பட்ட வட்டி மீது ஒரு TDS தள்ளுபடிக்காக நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

வைப்புகள் மீதான வட்டி: 

பிரிவு 194A மற்றும் 80TTA–இன்படி ரூபாய் 10,000/-க்கு மேற்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு/நிலைத்த வைப்புகள் மீதான வட்டி வருவாயில் 10% வரிப்பிடித்தம் செய்யப்படும்.
படிவம் 15G அல்லது 15H வங்கியில் சமர்ப்பித்து இருப்பின் வட்டி பிடித்தம் செய்யப்படாது. வருமானவரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வெளிப்படுத்தாத வங்கி வாடிக்கையாளர் எனில் வட்டி வருவாயில் 20 விழுக்காடு வரிப் பிடித்தம் செய்யப்படும்.

மாத ஊதியம் பெறுவோர்: 

வருமானவரிச் சட்டப்பிரிவு 192-இன்படி, மாத ஊதியம் பெறுவோர், ஒராண்டில் செலுத்த வேண்டிய வருமானவரியை முன்கூட்டியே தோராயமாக கணக்கிட்டு, அத்தொகையை தவணை முறையில் ஒவ்வொரு மாத ஊதியத்திலிருந்து ஊதியம் வழங்கும் அலுவரால் வருமானவரியாக பிடித்தம் செய்து வருமானவரித் துறையினர்க்கு செலுத்த வேண்டும். நிதியாண்டு இறுதிக்குள் மீதமுள்ள வருமானவரித் தொகையை செலுத்திய பிறகே அடுத்த மாத ஊதியம் வழங்கப்படும்.

சொத்துக்கள் வாங்குதல் மற்றும் விற்பது:

01-06-2013 முதல் ரூபாய் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட மதிப்புடைய வேளாண்மை நிலங்கள் அல்லாத மற்ற அசையாச் சொத்துக்களை கொள்முதல்/விற்பனை செய்யும் போது, இந்திய வருமான வரிச் சட்டப் பிரிவு 194- 1ஏ-இன்படி, விற்பனை மதிப்பில் ஒரு விழுக்காடுத் தொகையை வருமானவரி பிடித்தம் செய்யப்படும். அசையாச் சொத்தினை விற்பவர்  வெளிப்படுத்தவில்லை எனில் அசையாச் சொத்தின் மதிப்பில் 20% விழுக்காடு தொகை வரை வருமானவரியாக பிடித்தம் செய்து வருமானவரித்துறைக்கு கட்ட வேண்டும்

வருமான வரிச் சட்டப்பிரிவு 194சி-இன்படி, ஒப்பந்ததாரர்கள் செய்து முடித்த பணிகளுக்கு வழங்கப்படும் தொகைகள் மீது ஒரு விழுக்காடு தொகை வருமானவரி பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டும்.

பிரிவு 194 (1)-இன் படி நிலம் அல்லது கட்டிடம் மீதான வாடகை வருவாய் மீது 10 விழுக்காடு தொகையும், இயந்திர தளவாடங்களின் வாடகை வருவாய்க்கு 2 விழுக்காடும் வருமான வரிப் பிடித்தம் செய்து வருமான வரித் துறைக்கு கட்ட வேண்டும்.

பந்தயப் பரிசுகளுக்கு:

பிரிவு 194 பி-இன்படி ரூபாய் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பரிசுச் சீட்டுகள் மற்றும் புதிர்களுக்கு 30 விழுக்காடு வரியும், பிரிவு 194பிபி-இன்படி குதிரைப் பந்தயம் மற்றும் பிற பந்தயப் பரிசுகளுக்கு கிடைக்கும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட தொகைக்கு 30 விழுக்காடு வருமானவரி பிடித்தம் (TDS) செய்து மீதித் தொகை மட்டுமே வழங்கப்படும்.

பிரிவு 193-இன்படி சேமிப்பு பத்திரங்கள் மீதான வட்டிக்கு, 10 விழுக்காடு வருமானவரி பிடித்தம் செய்யப்படும்.

Commission and Brokerage: 

• பிரிவு 194D -இன்படி பட்டுவடா செய்யப்படும் தரகுத்தொகை மற்றும் காப்பீட்டுத்தரகுத் தொகையில் (Commission and Brokerage) 20,000/-க்கு மேற்பட்ட கமிசன் தொகையில் 10% வரி பிடித்தம் செய்யப்படும்.

• பிரிவு 194E –இன்படி விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் தொகையில் 20% வரி பிடித்தம் செய்யப்படும்.

• பிரிவு 194EE-இன்படி தேசிய சேமிப்புத்திட்ட பணப்பட்டுவடா தொகையில் ரூபாய் 2500க்கு மேற்பட்ட தொகைக்கு 20% வரி பிடித்தம் செய்யப்படும.

• பிரிவு 194G –இன்படி பரிசுச் சீட்டு விற்பனை கமிசன் தொகையில் 10% வரி பிடித்தம் செய்யப்படும்.

• பிரிவு 194H –இன்படி ரூபாய் 5000/-க்கு மேற்பட்ட தரகு/கமிசன் பட்டுவடா தொகையில் 10% வரிப் பிடித்தம் செய்யப்படும்.

• பிரிவு 194-I –இன்படி 1.80 இலட்சத்திற்கு மேற்பட்ட வாடகை பட்டுவடா தொகையில் , தளவாடங்கள், கருவிகள் & இயந்திரங்களுக்கு 2% வரிப் பிடித்தமும் மற்றும் நிலம், கட்டிடம் மற்றும் அறையணிகளுக்கு 10% வரிப்பிடித்தம் மேற்கொள்ளப்படும்.

• பிரிவு 194J –இன்படி ரூபாய் 30,000/-க்கு மேற்பட்ட சேவை மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் பணிகளுக்கு கட்டணத்தில் 10% வருமானவரிப்பிடித்தம் செய்யப்படும்.

நிலங்களைக் கையகப்படுத்தும் போது கிடைக்கும் தொகைக்கு:

• நகராட்சி எல்லையிலிருந்து 8 கி. மீ., தொலைவிற்குள் அமைந்துள்ள நிலங்களைக் கையகப்படுத்தும் போது (Compulsory Acquision of Land) அரசால் வழங்கப்படும் இழப்பீடு தொகை ரூபாய் 50 இலட்சத்திற்கு மேற்பட்ட இழப்பீட்டுத் தொகையில் 10.3 விழுக்காடு வருமானவரிப் பிடித்தம் செய்யப்படும்.

• வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு (Non-Residents) வழங்கப்படும் தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு வருமானவரி பிடித்தம் செய்யப்படும்.

• வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து வருமான வரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர்,  தவறாது படிவம் வழங்க வேண்டும்.