மருத்துவ காப்பீடு தேர்வு செய்யும் முன் கவனிக்கபட வேண்டியவை.

ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை பொதுக்காப்பீடு நிறுவனங்களே அதிக அளவில் வழங்கி வந்தன. ஆனால், சமீப காலமாக ஆயுள் காப்பீடு நிறுவனங்களும் இந்த வகை மருத்துவ பாலிசிகளை வழங்கி வருகின்றன.

''ஆயுள் காப்பீடு நிறுவனங்கள், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் ஹெல்த் இன்ஷூன்ஸ் பாலிசிகளை விநியோகிக்கும் (Stand alone) மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் என பல நிறுவனங்கள் பல்வேறு வகையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன. இவற்றில் ஏராளமான உட்பிரிவுகள் அடக்கம். இவற்றில் நமக்குத் தேவையான மற்றும் சரியான திட்டத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதைப் பார்க்கும் முன் நமக்குக் கிடைக்கும் பல்வேறு திட்டங்களை வகைப்படுத்தி முதலில் அறிந்துகொள்வோம்.

* மருத்துவமனை செலவு (Hospital Cash)

* பணப் பலன் (Defined Benifit plan)

* தீவிர நோய் பாதிப்பு (Critical illness)

* தனிநபர் விபத்துக் காப்பீடு (Personal accident)

* ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் (comprehensive health insurance)

இந்த ஐந்து வகையான திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களைச் சேர்த்தோ அல்லது தனித் தனியாகவோ மருத்துவக் காப்பீடு பாலிசி இருக்கிறது.

மருத்துவமனை செலவு:

மருத்துவப் பரிசோதனை இல்லை, வயது வரம்பு இல்லை, எந்த மருத்துவமனையிலும் சேரலாம் என்று வரும் விளம்பரங்கள் இந்த வகையைச் சார்ந்தது. இந்த வகையானத் திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் தொகையை உதாரணத்துக்கு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மருத்துவமனையில் இருந்த ஒவ்வொரு தினத்திற்கும் தருவார்கள். இந்த தொகைக்கும் மருத்துவச் செலவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உதாரணமாக, நீங்கள் மருத்துவமனையில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வீதம் ஐந்து நாட்கள் தங்கியிருந்தால், இந்த பாலிசிபடி 10,000 ரூபாய் கிடைக்கும். அந்த ஐந்து நாட்களில் நீங்கள் செய்த மருத்துவச் செலவுகள் எதற்கும் கிளைம் செய்ய முடியாது.

ஏற்கெனவே, பிரதான மருத்துவக் காப்பீடு பாலிசி வைத்துள்ளவர்கள் வேண்டுமானால் இத்தகைய பாலிசியைக் கூடுதலாக எடுக்கலாம். ஆனால், இதற்கான பிரீமியம் அதிகம். பொதுவாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள்தான் இதுபோன்ற பாலிசியை அதிகமாக விற்பனை செய்கின்றன.

உங்களுக்கு இந்த பாலிசி தேவைப்பட்டால், பொதுக் காப்பீடு அல்லது தனித்துவ மருத்துவக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் முழுமையான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் ரைடர் பாலிசியாக (துணை பாலிசி) இதை சேர்த்துக் கொள்ளலாம்.

பணப் பலன்:

இந்த வகையான திட்டம் முன்வடிவமைக்கப்பட்ட மருத்துவச் செலவிற்கு மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தொகையை அளிக்கும். இதில் 90% வரையறுக்கப்பட்ட மருத்துவச் செலவுகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவைச் சார்ந்தது. இந்த வகையான திட்டங்களில் பல நேரங்களில் நீங்கள் உங்கள் கையிலிருந்து தொகையை தர நேரிடும். இதிலும் ஏகப்பட்ட விதிமுறைகள், வருடாந்திர வரன்முறை, அட்டவணையில்லா நோய்கள் என்று ஏக கெடுபிடிகள். இந்த வகையான திட்டங்களை சில ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஏராளமாக விநியோகிக்கின்றன. கவனித்து பாலிசிகளை தேர்வு செய்யவும்.    

தீவிர நோய் பாதிப்பு:

மிகக் கடினமான நோய்கள் கண்டறியப்பட்ட பின் ஒரு பெருந்தொகையோ அல்லது மாதாந்திர தொகையோ, அல்லது மருத்துவச் செலவை ஏற்கக்கூடிய பாலிசி இது. இத்தகையத் திட்டங்களை எல்லா தரப்பு நிறுவனங்களும் அளிக்கின்றன. புற்றுநோய், மூளை புற்றுநோய், பக்கவாதம், இருதய பாதிப்பு, சிறுநீரக செயல் இழப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்றவற்றிற்கு இதன் கீழ் கவரேஜ் கிடைக்கும். 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், தீவிர நோய் வியாதி உள்ளவர்களுக்கும் மற்றும் பரம்பரை வியாதிகள் உடையவர்களுக்கும் இந்த திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்திருந்து அத்துடன் தீவிர நோய் பாதிப்பு பாலிசியை துணை பாலிசியாக எடுத்தால் பிரீமியம் குறைவாக இருக்கும்.

தனிநபர் விபத்துக் காப்பீடு:

இந்த பாலிசியை வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். செய்யும் தொழில் வகையைப் பொறுத்து பிரீமியம் மாறும். இந்த வகையானத் திட்டங்களில் விபத்தினால் ஏற்படும் உடல் சேதங்களுக்கோ, உயிர் இழப்பிற்கோ இழப்பீடு வழங்கப்படும். பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுக்கப்படும் விபத்துக் காப்பீடு திட்டம் அதிக பயனுள்ளதாக உள்ளது. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இருக்கும் இந்த பாலிசிகளில் ஓரிரு பயன்பாடு குறைவாக இருக்கும்.

10 லட்ச ரூபாய் கவரேஜ் ரைடர் பாலிசிக்கு நிறுவனத்தைப் பொறுத்து 350 ரூபாய் முதல் 700 ரூபாய் பிரீமியம் இருக்கும். பல பொதுக் காப்பீடு நிறுவனங்களின் விபத்து பாலிசியில் மருத்துவச் செலவுகளுக்கும் கவரேஜ் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டு அல்லது நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கு மிக அத்தியாவசியமான பாலிசி.

ஒருங்கிணைந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ்:

முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டம். இத்திட்டம் பாலிசி எடுப்பதற்கு முன் கண்டறியப்பட்ட சில நோய்களைத் தவிர, அனைத்து மருத்துவச் செலவுகளையும் உள்ளடக்கியது. பொதுவாக, உள்நோயாளி பிரிவுகளுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்துச் செலவுகளும் குறிப்பாக அறை வாடகை, ஆய்வகக் கட்டணம், நர்ஸிங் கட்டணம், அறுவை சிகிச்சை கட்டணம் ஏற்கப்படுகிறது. ஒருவரின் மருத்துவமனைச் செலவுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இருக்கிறது என்றால், அந்த நோய்க்குரிய மருத்துவமனை உள்நோயாளி செலவினங்கள் மற்றும் மருத்துவமனைக்கு வரும்முன் ஏற்பட்ட செலவுகளும், அதற்குபின் ஏற்படும் செலவுகளும் (Pre & Post Hospitalization) காப்பீடு நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

இதில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. இவை குறைந்த பிரீமியத்தில் வழங்கப்படுகிறது. விலையை வைத்து மட்டும் பாலிசிகளை மதிப்பிட முடியாது. இத்தகையச் சிறந்த திட்டங்களை நியூ இந்தியா, யுனைடெட், பஜாஜ், ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் ஸ்டார், மேக்ஸ், புபா, அப்போலோ போன்ற தனித்துவ காப்பீடு நிறுவனங்களும் வழங்குகின்றன. ஆயுள் காப்பீடு நிறுவனங்களில் இத்தகைய திட்டங்கள் இல்லை.

முழுமையான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் மேலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்கள் கிளைம் சேவைகளை மூன்றாம் நிறுவனத்திடம் (TPA - Third Party Administrator) தந்துவிடுகின்றன. அனைத்து சேவைகளுக்கும் நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட மூன்றாம் சேவை நிறுவனத்தையே அணுக வேண்டும்.

இறுதியாக..!

பொதுவாக எந்த மருத்துவக் காப்பீடு திட்டத்திலும் மகப்பேறு, பல் சார்ந்த சிகிச்சைகள் (விபத்தினால் ஏற்படுவதைத் தவிர), புறநோயாளி சிகிச்சைகள் மற்றும் ஒரு நாளுக்குள் வரும் உட்பிரிவு சிகிச்சை செலவினங்களுக்கு இழப்பீடு தருவதில்லை. ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து ஒரு சில மணி நேரத்திலேயே அனுப்பி விடப்படும் சிகிச்சைகளும் உண்டு. 

உதாரணமாக, கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை, சிறுநீரக கல் அகற்றல் போன்ற 130-க்கும் மேற்பட்ட உலக சுகாதார நிறுவனம் பட்டியலில் உள்ள நோய்களுக்கு உட்பிரிவு சிகிச்சை இல்லாமலேயே செலவுகள் காப்பீடு நிறுவனங்களால் ஏற்கப்படுகின்றன.

மேலும், நிறுவனங்கள் அளித்துள்ள மருத்துவமனை சேவைப் பட்டியலை பார்ப்பதும் முக்கியம். ஏனெனில், பட்டியலில் உள்ள மருத்துவமனைகளில் ஆகும் செலவுகளை காப்பீடு நிறுவனங்கள் நேரடியாக செலுத்திவிடுகிறது. மற்ற மருத்துவமனைகளில் நீங்கள் முதலில் செலவு செய்துவிட்டு, பிறகு உரிய ஆவணங்களை காப்பீடு நிறுவனத்திடம் உரிய காலத்திற்குள் செலுத்திவிட்டு பணத்தை பெற வேண்டிவரும். அதிலும் சில காப்பீடு நிறுவனங்கள் 10 முதல் 20% தொகையைப் பிடித்தம் செய்கின்றன.