முதலீட்டாளரிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்புகள்

தினந்தோறும் அறிவை வளர்த்துக் கொள்ளுதல்:

தினந்தோறும் படிப்பதன் மூலமே, தங்களை மேலும் சமர்த்தராக ஆக்கிக் கொள்கின்றனர். Warren Buffet தனது நாளில், படிப்பதற்காக, பல மணி நேரம் செலவிடுகிறார். அறிவினை வளர்த்துக் கொள்வதில், தாகத்துடன் உள்ளனர்.

திறமைசாலிகளை கூட்டாக வைத்திருப்பது: 

முதலீட்டாளர்கள் தங்களுடன் திறமைசாலிகளை கூட்டாளிகளாக வைத்திருந்து, அவர்களது திறமையினை பயன்படுத்திக் கொள்கின்றனர். Warren Buffet உடன் சார்லி மன்ஜர் என்ற திறமைசாலி 54 வருடங்களாக பணி புரிகிறார். மேலும், அவருடன் 20க்கும் மேற்பட்ட பெரிய திறமைசாலிகள் குழு உள்ளது.

தனக்கு தெரிந்த விடயங்களில் மட்டும் முதலீடு செய்வது:

தனக்கு தெரியாத, புரியாத முதலீடுகளில் இறங்காமலிருப்பது. டாட்காம் கம்பெனிகள் அதிகமாக பணத்தினை தந்தபோதும், வாரன் பஃபெட், அவற்றில் முதலீடு செய்யவில்லை. டாட் காம் வீழ்ச்சியினால், அவர் பாதிக்கப்படவில்லை.

தன்னடக்கம்:

முதலீட்டாளர்கள் தன்னடக்கத்துடன் இருப்பதனால், அவர்களால் மற்றவர்களிடமிருந்து, புதிதாக கற்றுக் கொள்ள முடிகிறது. தான் பெரியவன், சிறந்தவன் என்ற அகந்தை அவர்களிடம் கிடையாது.

காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வது:

முதலீட்டாளர்கள் காலத்திற்கேற்ப, புதிய நிறுவனங்களை புரிந்துக் கொண்டு, முதலீடு செய்கின்றனர். வாரன் பஃபெட், நமது நாட்டின் பேடிஎம் நிறுவனத்தில், பணமில்லா பரிவர்த்தனையினை புரிந்துக் கொண்டு, முதலீடு செய்துள்ளார்.

தரவுகளின் படி முடிவெடுப்பது:

முதலீட்டாளர்கள் தரவுகளின் படி, அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுப்பதில்லை. வாரன் பபெட், கோக்க கோலாவின் எதிர்காலம் குறித்த தரவுகளின் படி, 1988களில் பங்குசந்தை கடும் வீழ்ச்சியிலிருந்த போதும், துணிந்து முடிவெடுத்தார்.


முதலீடுகளை நீண்ட காலம் வைத்திருப்பது:

 முதலீடுகளை நீண்ட காலம் வைத்திருந்தால் மட்டுமே, அவற்றிலிருந்து அதிக லாபத்தினைப் பெற முடியும். வாரன் பபெட் 1988ல் வாங்கிய கோக்க கோலா பங்குகள், 1994ம் ஆண்டு, பங்குகள் உடைந்தபோது(Share split), அதிக அளவில் லாபத்தினை அடைந்தார்.

பரவலான முதலீடு:

 முதலீடுகளை பரவலாக வைத்திருக்கும் போது, ஒன்று வீழ்ந்தாலும், ஒன்று காப்பாற்றிவிடும். ஆங்கிலத்தில் சொல்வது போல், Don't put all your eggs in a single basket. உங்களுடைய எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்.

சிக்கனமாக இருப்பது:

பணத்தினை அருமையை அறிந்தவர்களாக இருப்பதால், முதலீடுகளை நல்ல விலையில் வாங்க முடிகிறது. வாரன் பபெட், 1958ல் வாங்கிய வீட்டில் இன்றும் வாழ்ந்து வருகிறார். அது அவரது சொத்து மதிப்பில் 0.001% தான்.

பொறுமை:

எந்த ஒரு முதலீடுமே பலன் தருவதற்கு காலம் ஆகும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும். முதலீடுகள் கைமேல் பலன் தருவதற்காக பொறுமையாக இருக்க வேண்டும்.

சுய சிந்தனை:

எந்த ஒரு முடிவினையும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது. கூட்டத்தோடு கோவிந்தா போடுவதைப் போல், எல்லாரும் செய்வதால் ஒரு விடயத்தை செய்யாமலிருப்பது. மற்றவர்கள் சொன்னாலும், தனக்கு ஒத்துவருமா என்று பார்த்து, சுயமாக சிந்தித்து முடிவெடுப்பது.

எளிமையான முதலீடுகள்:

தன்னால் எவ்வளவு முதலீடுகளை பரமாரிக்க முடியுமென்று பார்த்து, எளிமையாக முதலீடுகளை வைத்திருப்பது. கடினமாக முதலீடுகளில், கவனமாக இல்லையெனில், பணத்தை இழக்கும் வாய்ப்புண்டு. நல்ல பங்குகளை நீண்ட காலம் வைத்திருப்பது என்ற எளிமை தத்துவத்தின் படி, வாரன் பபெட் முதலீடு செய்கிறார். நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களுக்கு, பங்கு சந்தை குறியீடு சார்ந்த பரஸ்பர நிதிகளை பரிந்துரைக்கிறார்.

மதிப்பு சார்ந்த முதலீடுகள்:

பெஞ்சமின் கிராகம் சொன்னது போல், நிறுவனத்தின் மதிப்பு உணர்ந்து செய்யப்படும் முதலீடானது, பணத்தினை இழக்கும் அபாயம் குறைவு. யூகத்தில் செய்யப்படும் முதலீட்டில் பணத்தை இழக்கும் வாய்ப்புண்டு.

பொறுப்புணர்வு:

 முதலீட்டாளர்கள் தாங்கள் பெரிய பணத்தினை கையாளுகிறோம் என்ற பொறுப்புணர்ந்து, முதலீடு செய்கிறார்கள். அந்தப் பணம், பல பங்குதாரர்கள் நம்பிக்கையுடன் முதலீடு செய்தது என்பதை உணர்ந்து முதலீடு செய்கிறார்கள்.

நிதித் துறையில் அடிப்படையில் ஈடுபாடு:

 முதலீட்டாளர்கள் நிதி துறை மற்றும் கணக்கு சார்ந்த விடயங்களில் நன்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈடுபாடு கொண்டுள்ளார்கள். அவற்றின் அடி ஆர்வமாக வேலை பார்க்கின்றனர். அவ்வாறு இல்லையெனில், அவர்களால் அந்த துறையில் வெற்றி பெற முடியாது.

தோல்வியில் கற்றுக் கொள்வது:

தோல்வி வந்துவிட்டால் துவண்டு விடாமல், பாடம் கற்றுக் கொண்டு, வெல்லப் பார்க்கின்றனர். வாரன் ப பெட் போன்றவர்கள் பல்வேறு பங்கு சந்தை வீழ்ச்சிகளைக் கண்ட போதும், அவற்றில் பணத்தை இழந்த போதும், விடா முயற்சியுடன் தொடர்கின்றனர்.

தன்னம்பிக்கை:

 தினமும் தன்னை மேம்படுத்திக் கொண்டு, தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டு, மேலும் படித்து, தன்னம்பிக்கையுடன் தொடர்கின்றனர்.

நிதர்சனத்தனைப் புரிந்துக் கொள்ளுதல்:

 தன்னால் என்ன செய்ய முடியுமென உண்ரந்து, தன்னுடைய முதலீட்டினை வைத்திருப்பது. பேராசைப்பட்டு, தவறான முடிவெடுக்காதிருப்பது.