குழந்தைகளுக்கான சேமிப்பு பற்றிய விளக்கங்கள் | Explanations of Savings For Children

சேமிப்பு என்னும் சொல்லை வெறும் சொல்லாக நான் பார்க்க வில்லை, அது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கவேண்டிய ஒன்று. சேமிப்பின் உண்மைத்தன்மையை உங்களுடைய கஷ்ட காலங்களிலேயே நீங்கள் உணரமுடியும். கடினமான சூழலில் உங்களுக்கு உதவும் பணமே உங்களுக்கான முழு திருப்தியை ஏற்படுத்தும். ஒரு படத்தில் ரஜினியைப் போல் 30 நாட்களில் 30 கோடியை செலவழிப்பது மிக எளிது. ஆனால்  ஒரு ரூபாயை சேமிக்கலாம் என எண்ணம் தோன்றுவது கடினம்.

சேமிப்பு என்பது ஒரு கலை. சிறுக சிறுகச் சேர்த்து பெருக வாழ்ந்தோரும் உண்டு. சேமிப்பு என்ற பெயரில் தங்களது சொந்தத் தேவைகளைக் கூட சுருக்கிக்கொண்டு சுக தூக்கங்களை மறந்துவிட்டு " கஞ்சன் " என்ற பெயருடன் சொந்தங்களை தொலைத்துவிட்டு இறுதி நேரத்தில் எடுக்க பிடிக்க ஆளின்றி அனாதையாய் போய்ச் சேர்ந்தோரும் உண்டு. நல்ல சேமிப்பு என்பது நீங்கள் கடினமாக உழைத்த வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் நன்கு திட்டமிட்டு சேமிப்பது ஆகும். 

உதாரணத்திற்கு: நீங்கள் பத்து ரூபாய் சம்பாதித்தால் அதில் நீங்கள் 1 ரூபாயை சேமிக்கவேண்டும். அதே போன்று தான் விரலுக்கேற்ற வீக்கம் என்று சொல்வார்கள். நீங்கள் வாங்கும் சம்பளத்தில் அல்லது வருமானத்தில் செலவுகள் போக இருக்கின்ற வருமானத்தில் ஒரு பகுதியை சேமிக்க தொடங்கினால் அதுவே நல்ல சேமிப்பு. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு முதலில் சேமிக்க கற்றுக் கொடுங்கள். அதாவது உங்கள் வீட்டிற்கு அருகே உள்ள தபால் நிலையங்களில் சிறு சேமிப்பு கணக்கை உங்களது பிள்ளைகளுக்கு திறந்து அதன் மூலம் அவர்களை நீங்கள் சேமிக்க கற்றுக்கொடுத்து உற்சாகப்படுத்தலாம்.

சேமிப்பின் அருமையை ஜப்பான் மக்களிடம் நன்கு உணர முடியும். அவர்கள் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அவர்களின் சேமிப்பு மற்றும் எதிர்கால வருமான திட்டம். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு அது 1 பைசாவாக இருந்தாலும் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணத்தை பெருக்குவதே காரணம். இன்றைய சேமிப்பே நாளைய உங்களது பெருஞ்செல்வத்தின் எதிர்காலமாகும். 


சேமிக்க பல வழி வகைகள் இருப்பினும் அவசியமற்றவற்றை தவிர்த்து வீண் செலவுகளை குறைத்துக் கொண்டு உங்களின் வருமானத்தை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்தால் சேமிப்பும் உங்களுக்கு சாத்தியமான ஒன்றாக விளங்கும் என்பதில் ஐயமில்லை
சேமிப்பு என்பது உடனடியாக செலவழிக்காமல், தனியாக ஒதுக்கி வைத்திருப்பது.

உயிரினங்களில் சேமிப்பு பழக்கம்:

சேமிப்பு என்பது காலம் காலமாக விலங்குகளிடம், பூச்சிகளிடம், மனிதர்களிடம் இருந்து வந்துள்ளது.

உதாரணமாக, வெயில் காலத்தில் எறும்புகள் தங்களது குளிர் காலத்திற்கான தானியங்களை சேமித்து வைக்கும். குளிர் காலத்தில், தானியங்கள் கிடைப்பது கடினம். எனவே, சேமித்து வைத்த தானியங்களைக் கொண்டு, குளிர்காலத்தில் ஜீவித்திருக்க முடியும்.

ஐந்தறிவு உயிரனங்களுக்கே உள்ள இந்த சேமிக்கும் பழக்கமானது, ஆறாவது அறிவுள்ள மனிதர்களிடமும் ஆதி காலம் முதல் வந்துள்ளது. ஒரு உதாரணம், அங்கங்கு திடீரென்று அகப்படும் காசுகளை சேமித்து வைத்த பாண்டங்கள் தான். சமீபத்தில் கூட, டெல்லியில் 16ம் நூற்றாண்டு நாணயங்களின் புதையல் கிடைத்தது. மேலும், தானியக் கிடங்குகளில் தானியங்களை சேமித்து, மழைக் காலங்களில் பயன்படுத்திக் கொள்வதையும் மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.

இப்படி ஏன் சேமித்து வைக்க வேண்டும்:

சேமிக்கும் பொருட்கள் அல்லது பணம், நமக்கு அவசர காலத்தில் அல்லது தேவைப்படும் காலத்தில் உதவும். திடீரென்ற அதிக பணத் தேவை ஏற்படும் போது, மற்றவர்களிடம் கையேந்தாமல், நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள உதவும். உதாரணமாக, பெண்ணின் திருமணம் போன்ற செலவு ஏற்படும் போது, இவ்வாறு சேமித்து வைத்த பணமானது உதவும். அல்லது திடீரென்று வேலை இழக்க நேரிட்டால், இந்த சேமித்து வைத்த பணமானது குடும்பத்திற்கு உதவும். இதை ஆங்கிலத்தில் கூட ‘அவசர கால நிதி’(Emergency Fund) என்று கூறுவார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு அம்மையார், பணத்தை அங்கங்கே வீட்டில் ஒளித்து வைத்திருப்பார். வீட்டில் திடீரென்று பணத் தட்டுப்பாடு ஏற்பட்டால், எங்கிருந்தோ ஒளித்து வைத்திருந்த பணத்தினை திடீரென்று மந்திரவாதி போல் கண் முன்னே நீட்டி, குடும்ப செலவினை சமாளிப்பார்.

சேமிப்பு மட்டும் போதாது; முதலீடு வேண்டும்.

ஒரு தானிய மூட்டையை சேமித்து வைத்தால், அது ஒரே தானிய மூட்டையாகத் தான் இருக்கும். அல்லது, எலிகள் தின்று விடலாம். ஆனால், பயிரிடப்பட்ட தானியமானது, பன்மடங்கு பல்கிப் பெருகி, பல மடங்காக உதவுகிறது.

அது போலவே, இன்றைய பணவீக்க சமூகத்தில், சேமித்து வைத்த பணமானது, நாள் செல்ல செல்ல மதிப்பு குறையும். ரூபாய் நோட்டு வாபஸ் போன்றவை நிகழ்ந்தால், பணம் உபயோகமின்றிப் போகலாம். எனவே, சேமித்த பணத்தினை சேமிப்பு வங்கிகளிலோ, வைப்பு நிதிகளிலோ, Mutual Fund நிதிகளிலோ, பங்குகளிலோ முதலீடு செய்வ தென்பது, எதிர்காலத்தில் உதவும்

என் வாழ்வில் சேமிப்பு பழக்கம்:

எனக்கு சேமித்தலின் மீது ஆர்வம் அதிகம். நான் ஒவ்வொரு முறை ஏதேனும் வீண் செலவு செய்யும் போதும், மனவருத்தத்துடனே அதனை செலவு செய்வேன். ஐந்து ரூபாயை மிச்சப்படுத்த அரை மணி நேரமெல்லாம் காத்திருந்திருக்கிறேன்.

வீட்டிலேயே என்னை சரியான கஞ்சன் என திட்டுவார்கள். அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது.

என்னைப் பொறுத்தவரை கஞ்சன் என்றால், தான் வைத்திருக்கும் காசினை சுத்தமாக செலவு செய்யாதவன். ஆனா நான் அப்படி கிடையாது, எனக்கு தேவை எனத் தோன்றும் விஷயங்களுக்கு கண்மூடித்தனமாக செலவு செய்வேன். வீண் செலவு என்று தோன்றுவதை புறக்கணிப்பின்.

இளைஞர்களை கடன் சுமையில் தள்ளுவது இரண்டு விடயங்கள் தான்.

         • இருசக்கர வாகனம் மோகம்.

         • திருமணம்.

இளைஞர்கள் எடுத்த மாத்திரத்திலேயே தொலைக்காட்சி பெட்டியில் காட்டப்படும் விளம்பரங்களை நம்பி, பிறரிடம் காண்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, தன் தேவைக்கு அதிகமான இருசக்கர வாகனங்களை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இதில் பெரும்பாலும் சிக்கிக்கொள்வது நடுத்தர வர்க்கத்தினரே. பலர் அது போன்ற வாகனங்களை வாங்கி அதன் பின்னர் எரிபொருள் ஊற்ற கூட பணம் இல்லாமல் வண்டியை வீட்டிலேயே நிறுத்தி வைக்கின்றனர். எனவே உங்கள் தேவைக்கு ஏற்றாற் போல வாகனங்களை வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே திருமணத்திற்கு தேவைப்படுவது ஒரு ஆண் ஒரு பெண்  சொந்தபந்தங்கள் அவ்வளவுதான். மற்ற அனைத்தும் வீண் செலவுகள் என்றே தான் கூறுவேன். ஒரு நாள் கூத்துக்கு லட்ச லட்சமாய் கடன் வாங்கி செலவு செய்து, பின்னர் வாழ்நாள் முழுவதும் அதற்கு வட்டி கட்டியே பலர் தங்களுடைய வாழ்க்கையை இழக்கின்றனர்.

ஆடம்பர செலவுகளை குறைத்து அத்தியாவசியத்தை ஆடம்பரமாக அமைத்துக் கொள்ள முற்படுங்கள்.
ஒரு மனிதனுக்கு, இருக்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை இது மூன்றும் இருந்தாலே போதும் என நான் நினைக்கிறேன். ஆனால் நம் மனம் ஏனோ தெரியவில்லை நம்மிடம் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை நினைத்து எங்கி ஏங்கி சமூகத்திற்காகவே வாழ்ந்து கொண்டுள்ளது.