மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட அசத்தலான திட்டம் தான் செல்வ மகள் சேமிப்பு திட்டம். பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டமானது அவர்களின் பிறப்பு முதல் கொண்டு 10 வயது வரை முதலீடு செய்து கொள்ளும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர் அல்லது காப்பாளரின் உதவியுடன் இந்த கணக்கினை தொடங்க முடியும். இது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தினை காக்கும் விதமாக கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
SSY கணக்கிற்கான தகுதி:
அரசின் இந்த சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளுக்கானது. ஆக இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் மட்டுமே இணைய முடியும். யாருக்கு கணக்கு தொடங்கப்பட வேண்டுமே அந்த பெண் குழந்தையின் வயது கட்டாயம் 10 வயதிற்குள் இருக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஒரு குடும்பத்தில் இரு பெண் குழந்தைக்கு மட்டுமே இந்த கணக்கினை தொடங்க முடியும்.
குறைந்தபட்சம் எவ்வளவு செலுத்தலாம்.
பெண் குழந்தைகளூக்கான இந்த சேமிப்பு திட்டமானது பிறந்த உடனே கூட ஆரம்பித்துக் கொள்ளலாம் என்பதால், ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் வருடத்திற்கு 1.50 லட்சம் ரூபாய் வரையில் செலுத்திக் கொள்ளலாம். நீங்கள் இந்த கணக்கினை தொடங்கியதில் இருந்து குறைந்தது 15 வருடத்திற்கு செலுத்த வேண்டியிருக்கும்.
வட்டி விகிதம்:
மக்களிடையே நல்ல வறவேற்பை பெற்றுள்ள இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் ஆகும். இதற்கான வட்டி விகிதம் ஏப்ரல் - ஜூன் 2020 நிலவரப்படி 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலண்டுக்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காத்திற்கு உதவியாக இருக்கும்.
இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் அலுவலகமும் சேமிப்பு வங்கி வேலைகளை செய்கின்றன. ஆக அஞ்சலகங்களில் நீங்கள் இந்த கணக்கினை தொடங்க முடியும். இல்லையேல் பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கி கொள்ளலாம். இது தவிர பொதுத்துறை வங்கிகளான SBI, போன்ற வங்கிகளின் இணையத்திலும் டவுன் லோடு செய்து கொள்ளலாம். இது தவிர தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK உள்ளிட்டவற்றின் இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்.
இந்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வது எப்படி:
விண்ணப்பத்தில் Name of child என்ற இடத்தில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், எவ்வளவு தொகை ஆரம்பத்தில் முதலீடு செய்யப்போகிறீர்கள். அதனை DD-யாக கொடுக்க போகிறீகளா? அல்லது Check என்றால் அதன் எண், மற்றும் தேதி குறிப்பிட வேண்டியிருக்கும். அதோடு குழந்தையின் பிறந்த தேதி, பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் என பல விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்தினை எங்கு கொடுப்பது:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட அஞ்சல் அலுவலகத்திலோ அல்லது வங்கிகளிலோ கொடுத்து, அதனுடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இங்கு அடையாள அட்டையாக பெற்றோரின் ஆதார் அல்லது ஓட்டுனர் உரிமம், அடையாள ஆவணமாக பான் அட்டையும் கொடுத்துக் கொள்ளலாம்.
Balance தெரிந்து கொள்வது எப்படி:
உங்களது SSY கணக்கு எந்த வங்கிக் கிளையில் நிர்வகிக்கப்படுகிறதோ அந்த வங்கியின், Net Banking மூலமாக எளிதாக நிலுவையை தெரிந்து கொள்ளலாம். அல்லது Pass Book மூலமாகவும் நீங்கள் வங்கிக் கிளைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதே அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் கணக்கினை தொடங்கியிருந்தால், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று மட்டுமே பேலன்ஸினை தெரிந்து கொள்ள முடியும்.
வரி சலுகை:
சுகன்யா சமிர்தி யோஜனா திட்டக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் எந்தவொரு தொகையும் 1961 ஆம் ஆண்டின் 80C income tax சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு மற்றும் வட்டித் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
முன் கூட்டியே பணத்தினை திரும்ப பெற முடியுமா:
பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். ஒரு வேளை உங்களது செல்வ மகள் கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.
முதிர்வு காத்திற்கு முன்பே கணக்கினை மூட முடியுமா:
நிச்சயம் முடியும். எதிர்பாராத விதமாக ஏற்படும் முக்கிய காரணங்களுக்கான மூடிக் கொள்ளலாம். அதாவது தீவிர நோய், அல்லது முதன்மை கணக்கு வைத்திருப்பவர் ஒரு வேலை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், கணக்கினை முடித்துக் கொள்ளலாம். குழந்தையின் பெண் குழந்தையின் மேற்படிப்பு செலவுக்கு பணம் தேவையென்றால், 18 வயது நிரம்பியவுடன் 50 சதவிகித சேமிப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இடையில் நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடங்க முடியுமா:
நிச்சயம் முடியும். குறிப்பிட்ட தொகை அபாரதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடரலாம். ஆக குறிப்பிட்ட காலம் செலுத்திவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் முதலீட்டினை தொடர முடியாமல், பின்னர் தொடரலாம் என நினைப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும்.
இந்தியாவின் எந்த பகுதிக்கும் மாற்றிக் கொள்ளலாம்.
சரி ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற முடியுமா என்றால், நிச்சயம் முடியும். அது இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதிக்கும் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் டிரான்ஸ்பர் விணப்பத்தினை பூர்த்தி செய்து, உங்களது கணக்கு நிர்வகிக்கப்படும் சம்பந்தபட்ட கிளையில் கொடுக்க வேண்டும்.
கடன் வாங்க முடியுமா:
சில திட்டங்களில் சேமிப்புக்கான ஆதாரத்தினை காட்டி கடன் வாங்க முடியும். ஆனால் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அப்படி கடன் வாங்க முடியாது. நாட்டில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற திட்டங்களில் ரிஸ்க் இல்லாததால் மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது இந்த திட்டம்.