CIBIL score என்றால் என்ன | What is CIBIL Score & Report.

வங்கியில் கடன் கோருபவர், வங்கி அதிகாரி இருவருக்கும் வயற்றைக் கலக்கும் ஒரு விஷயம் இருக்குமென்றால் அது சிபில் மதிப்பெண் தான் (CIBIL score). சரியில்லாத சிபில் மதிப்பெண்ணால் பிழைப்பு கெட்டுப் போனவர்கள் இரண்டு தரப்பிலும் ஏராளம். சிபில் உங்களது கடன் பயன்பாட்டு மதிப்பெண் அட்டை. இதுவரை நீங்கள் வாங்கிய கடன்களின் ஜாதகம்.

வங்கிகள் நமது கடன் அல்லது கிரெடிட் கார்டு விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு முன்னால் நமது சிபில் ஜாதகத்தைப் பார்க்கின்றன.
சிபில், கடன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இப்படி ஒரு ஜாதகத்தை, அதாவது சி.ஐ.ஆர் கடன் தகவல் அறிக்கையும் (Credit Information Report), கடன் மதிப்பெண்ணும் (CIBIL Score) தயாரித்து வைத்திருக்கிறது.
நீங்கள் இதுவரை கடனே வாங்கியதில்லை என்றாலும், உங்கள் பான் எண்ணை சொன்னால், வைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி போல உங்களுக்கும் ஒரு சிபில் ஜாதகம் எடுத்து கொடுப்பார்கள்.

சிபில் மதிப்பெண் (CIBIL score) என்றால் என்ன:

CIBIL (Credit Information Bureau [India] Limited) என்பது ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கடன் பணியக நிறுவனம் (Credit Bureau).
தனிநபர் கடன்கள், கடன் அட்டைகள், மற்ற நிறுவனங்கள் தொடர்பான அனைத்து கடன் நடவடிக்கைகளையும் சிபில் மௌனமாக பின் தொடர்கிறது.
கடன்களின் வரலாறு, தற்போதைய நிலை போன்ற தகவல்களை சிபில் சேகரிக்கிறது.

சிபிலிடம் உறுப்பினராக பதிவுசெய்துகொண்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்களிடம் கடன் பெற்ற நபர்களின் கடன் வரலாறு, கடன்களின் இப்போதுள்ள நிலை, இது போன்ற கடன் தொடர்பான தகவல்களை சிபிலுக்கு தொடர்ந்து சமர்ப்பிக்கின்றன.
இந்த நிறுவனங்கள் வழங்கிய தகவல் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், நிறுவனத்துக்கும் சிபில் ஒரு ஜாதகம் தயாரிக்கிறது.

இது தான் சிபில் மதிப்பெண் (CIBIL score):

• வங்கிகள் கட்டணம் கட்டி உங்கள் சிபில் ஜாதகத்தை வாங்கிப் பார்க்கிறார்கள். நீங்கள் அறியாமலே உங்கள் தனி அடையாளம் ஒன்றை (பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை,ஓட்டுநர் உரிமம்,ரேஷன் கார்டு) உள்ளிட்டு உங்கள் சிபில் மதிப்பெண்ணை பார்த்து விட முடியும். வங்கிகள் கட்டாயம் அப்படி சரி பார்க்கவேண்டும்.

• அப்படி சரி பார்க்காமல் சிபில் சரியில்லாத ஒரு நபருக்கு லோன் கொடுத்து, அந்த கடனை திருப்பி வாங்க முடியவில்லை என்றாலும் சிபில் ஸ்கோர் 600 இருக்கும் இன்னாருக்கு நீ எப்படி கடன் கொடுக்கப்பட்டது என்று வங்கி அதிகாரி மேல் நடவடிக்கை எடுக்கப்படும்! பலர் சம்பள குறைப்பெல்லாம் தண்டனையாக பெறுகிறார்கள்.

• உள்ளூரில் கோடிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு உல்லாச பயணம் போயிருக்கும் தொழிலதிபர்கள் பட்டியல் நாளுக்கு நாள் நீள்கிறதே, அவர்களுக்கு சரியாக சிபில் ஜாதகம் பார்த்திருக்க வேண்டாமா என்று தோன்றுகிறதா.

• இப்போதைக்கு சிபில் மாதிரி ​​இந்தியாவில் மொத்தம் நான்கு கடன் பணியகங்கள் உள்ளன. அதில் CIBIL தான் (Credit Information Bureau (India) Limited) அதிகம் பிரபலமானது. அனைத்து கடன் பணியகங்களுமே இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்றவை.

• இந்த தளங்களில் மொபைல் எண் உள்பட பல தகவல்களை உள்ளீடு செய்யக்கேட்கும். கொடுத்துவிட்டால் சிபில் ஸ்கோர் கிடைக்கும்.

வங்கியில் கடன் பெற குறைந்த அளவு சிபில் மதிப்பெண் எவ்வளவு:

• சிபில் மதிப்பெண் 300ல் ஆரம்பித்து 900 வரை இருக்கிறது. கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு உடனடி சாங்க்ஷன் பெற 650 க்கு மேல் மதிப்பெண் இருக்க வேண்டும்.

• எவ்வளவு அதிகமான சிபில் மதிப்பெண் இருக்கிறதோ, அந்த அளவு குறைந்த வட்டி விகிதம் போன்ற நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

300 - 500 சிபில் ஸ்கோர்: 

உங்களுக்கு வங்கியில் கடன் கிடைக்காது. மதுரையில்தான் யாரென்றாலும் அன்புடன் கடன் தருகிறார்கள். அங்கே அணுகலாம்.

550 முதல் 600 வரை: 

எல்லைக்கோட்டில் இருக்கிறீர்கள். வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவது, அட்டை பயன்பாட்டை செம்மைப்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சிறியளவில் கடன் ஒழுக்கம், பெரியளவில் வெகுமதி. (அதாவது அதிகமாக கடன் கிடைக்கும்). உங்களுக்கு தனியாக கீழே ஒரு வழிகாட்டுதல் (3ல்) இருக்கிறது. அதையும் படியுங்கள்.

650 முதல் 700 வரை:  

நீங்கள் 650 கிரெடிட் புள்ளிகளைப் பெறும்போது, ​​வங்கி கடன்களைப் பெற கதவுகள் திறக்கின்றன. ஒரு சில வங்கிகள் அதிக வட்டி விகிதத்துடன் கடன் சேவைகளை வழங்க முன்வரலாம்.

750 முதல் 800 வரை:  

இது ஒரு நல்ல சிபில் மதிப்பெண். வங்கிகள் இரண்டாவது சிந்தனை இல்லாமல் கடன் வழங்க முன் வரும். இது நீங்கள் ஒரு பொறுப்புள்ள நபர் என்பதைக் காட்டுகிறது. உங்கள் அப்பாவிடம் காட்டலாம். பெருமைப் படுவார்.

• மறந்தும் நண்பர்களிடம் காட்டிவிடாதீர்கள். உங்கள் பெயரில் ஒரு லோன் வாங்கித்தரும்படி நச்சரிக்கலாம். வாழ்க்கையில் செய்யவே கூடாத செயல்கள்: அடுத்தவர்களுக்காக கடன் வாங்குவது, கடனுக்கு ஜாமீன் போடுவது.

850 முதல் 900 சிபில் மதிப்பெண்: 

பணிவான வணக்கம். சமூகம் பெரிய இடம். நீங்கள் வங்கிகளின் அனைத்து சேவைகளையும் வசதிகளையும், முடிந்த அளவு சலுகைகளுடன், சில சமயம் இலவசமாக கூட அடையலாம்.


குறைந்துபோன எனது சிபிலை எப்படி சரிபடுத்துவது:

• 400, 420 என்பதையெல்லாம் சரி பண்ண முடியாது. 550+ என்றால் கீழுள்ளதை முயற்சிக்கலாம்.
உங்கள் கடன்களுக்கு சரியான நேரத்தில் தவணை, வட்டி செலுத்துங்கள்.

• கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை இருக்கக் கூடாது. பில் அல்லது போன் வந்த உடனே கட்டிவிடுங்கள். இப்படி ஒழுங்காக கடன் திருப்பித்தருவதற்கு 35% வெயிட்டேஜ் தருகிறார்கள்.

• உங்கள் கடன் லிமிட்டை நீங்கள் எந்தளவு பயன்படுத்துகிறீர்கள் என்பதற்கு 30% வெயிட்டேஜ். 10 லட்சம் ஓவர் ட்ராப்ட்டை 10.05 லட்சம் என்று எப்போதும் புல்லாக காலி பண்ணி வைத்திருந்தீர்கள் என்றால் சிபில் மார்க் குறையும்.

• நீங்கள் நீண்ட நாள் கடன்காரராக இருந்து, ஆனால் ஒழுங்காக திருப்பி செலுத்தி வந்தால் போனஸ் 15% வெயிட்டேஜ். கலவையாக பலவகையில் கடன் வாங்கியிருந்தால் அதற்கும் ஒரு 10% வெயிட்டேஜ்.

• நீங்கள் வங்கிகள் ஒன்று விடாமல் ஏறி இறங்கி அடிக்கடி கடன் கேட்டு, பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டு விட்டு வருபவராக இருந்தால் போச்சு. வங்கிகள் சிபிலில் அடிக்கடி உங்கள் ஜாதகத்தைத் தேடி, அதனாலும் உங்கள் சிபில் மார்க் குறைந்து விடும்.

• அதாவது நீங்கள் உங்கள் வங்கியில் கடன் சார்பாக ஒரு விசாரணை மேற்கொண்டால்கூட சிபில் உஷாராகிவிடும். உங்கள் ஜாதகத்தில் எழுதிக்கொள்ளும். சிபில் மார்க்கை மாற்றும். இந்த விஷயத்தில் ஒழுங்காக இருந்தால் அதற்கு ஒரு 10% வெயிட்டேஜ்.

• உங்கள் வங்கிக்கு போய் "தேர்தல் வரப்போகிறது சார், ஒரு இரண்டு கோடி கடன் கிடைக்குமா? ஆறு மாதத்தில் வசூல் பண்ணி அசால்ட்டாக திருப்பிக் கட்டிவிடலாம். வேண்டுமானால் ஒரு ஐந்து கோடி டெபாசிட்டும் பண்ணி விடுகிறேன்" என்று வெயிட் காட்டி மாட்டிக்கொள்ள வேண்டாம், ஜாக்கிரதை.

CIBIL - குறிப்புகள்:

• நண்பர் கடனுக்கு பிணை கொடுத்திருந்தால், நண்பர் கடனை திருப்பி செலுத்துகிறாரா என்று எச்சரிக்கையுடன் பாருங்கள்
எதிர்காலத்தில் கடன் விண்ணப்பிக்கும் போது, விவேகமாக கடன்களை தெரிவு செய்யுங்கள்.

• பெற்றோர் உங்கள் எதிர்காலத்துக்காக கல்விக்கடன் வாங்கியிருந்தால், நீங்கள் அதை நன்றிக்கடனோடு திருப்பி செலுத்துங்கள்.

• நீங்கள் சமீபத்தில் கொடுத்த கடன் விண்ணப்பம் வங்கியால் நிராகரிக்கப்பட்டது என்றால் இது உங்கள் சிபில் மதிப்பெண்ணை எதிர்மறையாக பாதிக்கும். உடனடியாக மற்றொரு கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டாம், ஆறப்போடுங்கள்.

• உங்கள் ஓவர் டிராப்ட் கணக்கில் பணமில்லை என்று உங்கள் காசோலையை திருப்பியனுப்பினால், சிபிலும் முகத்தை திருப்பிக் கொள்ளும்.

• சிபிலிலும் தவறு இருக்கலாம். நீங்கள் முழுவதுமாக முடித்துவிட்ட கடன் இன்னும் தவணைத்தேதி தாண்டியும் முடிக்கப்படாமல் இருக்கிறது என்று சிலசமயம் காட்டும். வாங்கி சரிபார்த்து, திருத்தம் செய்ய ஏற்பாடு வேண்டும்.