திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி நிரந்தர வைப்பு திட்டம் | TDCC bank Fixed Deposit.

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வைப்பு நிதி:

நிலையான வைப்புத்தொகை என்பது முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும்.  கூட்டுறவு வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை நமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். பாதுகாப்பு மற்றும் உடனடித் தேவைகளுக்கு ஏற்ப ரொக்கமாக மாற்றக்கூடிய வசதியைக் (liquidity) கொண்ட காரணத்தால் அனைவருக்கும், குறிப்பாக வயதானவர்களுக்கு வங்கி வைப்பு நிதி தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

வட்டி விகிதங்கள்:

கூட்டுறவு வங்கியில் வட்டியை மாதா மாதம் பெறுவதும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெறுவதும்,  ஆண்டுக்கு ஒருமுறை பெறுவதும் மற்றும் முதிர்வு காலம் முடிந்த பின்னர் பெறுவதும் என நமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யலாம். வைப்பு வட்டி விகிதங்கள் சந்தை ஏற்ற இறக்கங்களில் ஏற்படும் மாற்றங்களால் பாதிக்கப்படாது. எனவே, உங்கள் வைப்புத்தொகையில் உத்தரவாதமான வருமானத்தை நீங்கள் பெற முடியும், 

tdcc bank trichy

மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி ( Senior Citizen Interest Rate ):

கூட்டுறவு வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியும் வழங்குகின்றன. மிகவும் பாதுகாப்பான முதலீட்டாகவும் நிலையான வைப்பு தொகை திட்டம் கருதப்படுகிறது. 

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதம் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் தங்கள் வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களில்  பொதுமக்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட அரை ( 0.5%) சதவிகிதம் அதிகமாக மூத்த குடிமக்களுக்கு அளிக்கின்றன. 

Tdcc bank fd

ஆட்டோ ரின்யூவல் (Auto Renewal):

வங்கி முதிர்வு தேதியன்று டெபாசிட் ரசீது குறிப்பிட்ட கிளையில் சமர்ப்பிக்கப்படாமலும், புதுப்பித்தல் தொடர்பான வேண்டுகோள் வாடிக்கையாளரிடமிருந்து வராமல் இருந்தாலும், டெபாசிட் ஏற்கனவே இருந்த காலத்திற்கு அப்போதைய வட்டி விகிதத்தில் மீண்டும் புதுப்பிக்கப்படும். 

வாரிசு நியமனம் (Deposit Nomminee) :

வாரிசு நியமனம் என்பது முதிர்வு தேதிக்கு முன்னர் தான் காலமாகிவிட்டால் தன் பெயரில் இருக்கும் டெபாசிட் தொகையை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தரும் அதிகாரம்.  டெபாசிட் துவங்கும் போதே வாடிக்கையாளர்கள் வாரிசு நியமனம் செய்து விண்ணப்பத்தை வங்கிக்குச் சமர்ப்பித்தல் நலம். வாரிசு விண்ணப்பம் செய்வதற்கு வாரிசுதாரரின் கையெழுத்து தேவையில்லை. ஒரு வேளை நியமிக்கப்படும் வாரிசுதாரர் குழந்தையாக, மைனராக இருந்தால் அவரது காப்பாளர் (Guardian) பெயரும், விவரமும் தரப்பட வேண்டும். 

டெபாசிட் ப்ரீகுளோஷர் (Deposit Foreclosure):

டெபாசிட்டை முதிர்வுதேதிக்கு முன்னரே முடித்துக்கொள்ள வங்கிகள் வழிவகை செய்துள்ளன. டெபாசிட் வங்கியில் இருந்த காலத்தைக் கணக்கிட்டு அந்தக் காலத்திற்கு உள்ளான வட்டி விகிதத்தில் இருந்து ஓரிரு சதவிகிதம் குறைவாக வட்டி கணக்கிடப்பட்டுத் தொகை தரப்படும். 

டெபாசிட் கடன் (Loan On Deposit):

வங்கிகளும் வைப்புதாரர்களின் தேவை கருதி அவர்களது வைப்பு நிதியில் கடன் பெற்றுக்கொள்ள அனுமதிக்கின்றன. அதற்கான வட்டி விகிதம் டெபாசிட்டிற்கு அளிக்கப்படும் வட்டியிலிருந்து  இரண்டு சதவிகிதம் அதிகமாக இருக்கும்.  பங்குத் தொகை (Margin Money) 10% முதல் 25%  இருக்கலாம்.  அதாவது டெபாசிட் தொகை ரூ 1 லட்சம் என்றால் கடன் தொகை, வங்கியைப் பொறுத்து ரூ.85000 வரை கிடைக்கும்.   ஒரு வேளை டெபாசிட் முதிர்வு தேதிக்கு முன்னர் கடன் அடைக்கப்படா விட்டால் முதிர்வு தேதியன்று கடன் கணக்கில் நிலுவையில் உள்ள தொகை பிடித்தம் செய்யப்பட்டு மீதி உள்ள தொகை டெபாசிட்தாரருக்கு வழங்கப்படும்.

டெபாசிட் வட்டிக்கான வரிபிடித்தம். (TDS – Tax Deducted at Source)

வைப்புநிதிக்கான வட்டி ரூ.10000 ற்கு மேல் கொடுக்கப்படும்போது, வங்கி வழங்கப்படும் வட்டித் தொகையில் வரி பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு அனுப்பும். நீங்கள் வருமான வரி எல்லைக்குள் உட்பட்டவர் இல்லையென்றாலோ அல்லது நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி பூஜ்யம் என்றாலோ அதற்கு உரிய படிவத்தை (15 G) வங்கியில் சமர்ப்பித்து வரிப்பிடித்தத்தைத் தவிர்க்கலாம்.  மூத்த குடிமக்கள் படிவ எண் 15H சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட படிவங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் கொடுக்கப்பட வேண்டும்.

கணக்கு யார் பெயரில் துவங்கலாம்:

டெபாசிட் கணக்கைத் தனிநபர் கணக்காகவோ, இருவர் பெயரிலோ, இருவருக்கு மேற்பட்டோர் பெயரிலோ துவங்கலாம்.

வாடிக்கையாளர் தேவைகளைக் கருத்தில் கொண்டு வங்கிகள் Joint Account ( இருவரோ அதற்கு அதிகமானவர்களோ வரவு செலவு செய்யும் ) வசதியை அளிக்கின்றன.  இதன்படி எந்த ஒரு வங்கிக் கணக்கையும் (சேமிப்புக் கணக்கு மற்றும் வைப்பு நிதிக் கணக்குகள்) ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயர்களில் துவங்கலாம்.  அது Jointly or Survivor, Either or Survivor என்று நெறிப்படுத்தப் பட்டுள்ளது. 

திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வைப்பு நிதிகளுக்கான காப்பீடு:

கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகள் பொதுவாகப் பாதுகாப்பு உடையவை. மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் Deposit Insurance & Credit Guarantee Corporation வங்கி டெபாசிட்டுகளுக்கு அதிக பட்சம் ரூ. 5 லட்சம் வரை காப்புறுதி வழங்கிகுறது.