நீங்கள் பணக்காரர் ஆவதற்கான குணங்கள் | Best Qualities That Make You Rich

வரவிற்குள்ளாக செலவு செய்து வாழ்வது:

செலவினை கட்டுக்குள்ளாக வைத்திருந்தால் மட்டுமே ஒருவரால் பணக்காரர் ஆக முடியும். எந்த ஒரு பணக்காரரும் சிக்கனம் இன்றி உருவாகவில்லை. சிக்கனம் இல்லாமல், வரவுக்குள்ளாக செலவு செய்து, எளிமையாக வாழ்ந்து, பணம் சேமிக்காமல் ஒருவர் பணக்காரர் ஆக இயலாது. வாரன் பபெட் 1958ம் ஆண்டு வாங்கிய வீட்டிலேயே இன்னும் வசிக்கிறார். எவ்வளவோ பணக்காரர் ஆன பின்பும் கூட, அவர் வீடு மாறவில்லை.

பொறுமையாக இருப்பது:

பணக்காரர் ஆவதற்கு பொறுமை வேண்டும். எந்த ஒரு பணக்காரரும் முதலீட்டினை செய்தபின்பு, அதனை ஒரு விதையினை தண்ணீர் உற்றி, உரமிட்டு காப்பது போல், காப்பாற்றி, போஷித்து, பொறுமையாக முதலீட்டினை வளர விடுகின்றனர்.
வாரன் பபெட் காலம் செல்ல செல்ல, அதிக பணக்காரர் ஆவதை பின்வரும் வரைப்படம் விளக்குகிறது. 1958ம் ஆண்டு முதலீடுகள் பெரிய பலன் தருவதற்கு, சில தசாப்தங்களை அவர் பொறுமையாக கடக்க வேண்டியிருந்தது.

கடன் வாங்காமல் இருப்பது:

கடன் என்பது மோசமான எஜமானன். கடன்களில் மாட்டிக் கொண்ட ஒருவருக்கு, கடனை விட்டு வெளியே வருவதே பெரும் பாடாக இருக்கும் போது, பணக்காரர் ஆவதென்பது இன்னும் கடினமாகிறது.
இது குழிக்குள் இருந்துகொண்டு, எவரெஸ்ட் மலை ஏற முயற்சிப்பது போல. முதலில் குழிக்குள் இருந்து வெளியே வந்தபின்னரே, மலை ஏற முடியும்.

பணக்காரர்கள் தனி மனித கடன்களை, கடன் அட்டைகளைத் தவிர்க்கின்றனர். கடனை எந்த ரூபத்திலும் தவிர்க்கிறார்கள். முதலீட்டினை பல்மடங்காக பெருக்கும் வாய்ப்புள்ள தொழிலுக்காக கடன் வாங்கலாம். அதையும் தவிர்க்க பார்ப்பார்கள். வாங்கிவிட்டால் கூட, அவர்கள் அதனை சீக்கிரமாக அடைக்கப் பார்ப்பார்கள்.

உலகத்திலேயே அதிக தொன்மையான மகிழ்வுந்துகளை சேகரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற அமெரிக்க மில்லியனர், லீ மே, ஒரே ஒரு கார் மட்டுமே கடன் வாங்கி, வாங்கினார். அதைக் கூட, உடனே அடைத்துவிட்டார்.

படிப்பறிவு, உலக அறிவினை வளர்த்துக் கொள்வது:

உலகின் நடப்புகளை தினம் தினம் தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன் மூலமே, வாய்ப்புகளை சரியான பயன்படுத்திக் கொள்ள முடியும். உலக அறிவை வளர்த்துக் கொள்ள, நிறைய புத்தகங்களைப் படிக்க வேண்டும். எல்லா கோடீஸ்வரர்களும் குறைந்தபட்சம் ஒரு பட்டப்படிப்பாவது படித்திருக்கிறார்கள். தங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வைக்கின்றனர். மேலும் அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.

• வாரன் பபெட் தினமும் அன்றைய செய்திகளை காலையிலேயே படித்து விடுகிறார். மேலும், 80% நேரத்தினை புத்தகம் படிக்க செலவிடுகிறார்.

• பணத்தைப் பெருக்கும் வாய்ப்புகளை தைரியமாக பயன்படுத்திக் கொள்வது. 

• மற்றவர்கள் செய்ய தயங்கும் தொழில்களை தைரியமாக தொடங்கி நடத்துவது.

• பணத்தை பெருக்கும் வாய்ப்புகளை, மற்றவர்களைப் போல் அஞ்சாமல், தைரியமாக பயன்படுத்திக் கொள்வது.

• பங்கு சந்தையின் 1988 வீழ்ச்சிக்கு பின்பு, எல்லாரும் அஞ்சியபோது, வாரன் பபெட் அஞ்சாமல் கொக்க கோலாவில், மிகவும் அதிகமாக முதலீடு செய்தார். அது அவருக்கு 1750% மேலாக லாபத்தினைக் கொடுத்துள்ளது.

கூட்டு வட்டியின் மகத்துவத்தினை புரிந்து கொள்வது:

கூட்டுவட்டியின் பயனை அடைய சீக்கிரமாக முதலீடு செய்து, நீண்ட காலம் பணத்தினை வளர விடுவது. நடுவில் பணத்தினை எடுப்பது, தங்க முட்டையிடும் வாத்தினை வெட்டுவதற்கு சமமானது.
பின்வரும் வரைபடத்தில், 18வது வயதில் தொடங்கி, தொடர்ந்து மாதம் $5000 முதலீடு செய்யும் கிரிஸ்டோபர், 28வது வயதில் நிறுத்திவிட்ட ஆலிஸை விடவும், 28வது வயதில் தொடங்கிய பார்னியை விடவும், அதிகமாக பணத்தைப் பெருக்கியுள்ளார். எனவே, கூட்டு வட்டியின் பயனைப் பெற, சீக்கிரமாக முதலீடு தொடங்கி, தொடர்ந்து செய்து வர வேண்டும்.


முதலீட்டுக்கு பிறகே செலவுகள் என இருப்பது:

எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சேமிக்கிறோம். எவ்வளவு முதலீடு செய்கிறோம் என்பது முக்கியம்.
தங்களது முதலீடுகளுக்கு முதலில் பணத்தை ஒதுக்கி விட்டு, மீதமுள்ள பணத்தில் வாழ்க்கையை நடத்துவது. மாதம் 75% முதலீடு செய்பவர்கள் கூட உள்ளார்கள்.

வாயிற்காப்போனாகவும், பெட்ரோல் கிடங்கில் சாதாரண வேலை பார்த்த ரொனால்ட் ரீட், $8 மில்லியன் முதலீட்டால் பெருக்கியுள்ளார். அவர் வாரம் சம்பாதித்த $50 பணத்தில், $40 டாலர் சேமித்து முதலீடு செய்துள்ளார்.

செய்யும் தொழிலை கடுமையாக உழைத்தும் அனுபவித்து செய்வது:

செல்வந்தர்கள் தாங்கள் செய்யும் தொழிலை கடனுக்கு என்று செய்யாமல் அதனை மிகவும் விரும்பி செய்கிறார்கள். கடுமையாக உழைக்கிறார்கள். தொழிலில் முதலீடு செய்கிறார்கள். அதில் மேன் மேலும் விரிவு படுத்துகிறார்கள். அதன் மூலம் தொழிலில் நல்லதொரு லாபத்தை பெறுகிறார்கள். பணத்திற்காக தொழில் செய்யாமல் அந்த தொழிலில் இருக்கும் இன்பத்திற்காக, தொழில் செய்வதால் பணம் பன்மடங்கு பெருகுகிறது. பலர் செய்வதற்கு தயங்கும் தொழில்களை கூட விரும்பி ஆர்வமாக செய்கிறார்கள்.

நல்ல ஒரு நட்பு வட்டத்தினை வைத்திருப்பது:

செல்வந்தர்கள் தங்களுக்குள்ளே நல்லதொரு நட்பு வட்டத்தினை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். தங்களுடைய பணம் பெருக்கும் உத்திகளை பரிமாறிக் கொள்கிறார்கள். அவர்கள் நேரத்தை வீணாக்கும் வீண் செலவு செய்யும் கூட்டத்தோடு தங்களை சேர்த்துக் கொள்வதில்லை. பெரும்பாலும் விவாகரத்து செய்வதில்லை. ஒரே ஒரு மனைவியுடன் குடும்பத்தை நடத்துகிறார்கள். அந்த மனைவியும் அவர்களுக்கு நல்லதொரு ஆலோசகராக இருக்கிறார்.

ஈகைக்கு தாராளமாக இருப்பது:

எல்லா செல்வந்தர்களும் ஈகை காரியங்களுக்கு தாராளமாக பண உதவி செய்கிறார்கள். சமுதாயத்திற்கு தாங்கள் பட்ட கடனை மறுபடி செலுத்துகிறார்கள். ஈகை செய்வதன் மூலம் அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்து அத்தகைய மன மகிழ்ச்சியானது அவர்களுடைய வாழ்க்கையில் எல்லா அங்கங்களிலும் பிரதிபலிக்கிறது. தொடர்ந்து செய்துவரும் ஈகையானது மேலும் சிக்கனமாக இருப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் அவர்களை தூண்டுகிறது.