வீட்டுக் கடன் வாங்கினால் கிடைக்கும் வரிச்சலுகைகள் | Tax Benefits Available On A Home Loan.

நீங்கள் வருமானவரி கட்டும் நிலையில் இருப்பவர்களா? எந்த யோசனையும் இல்லாமல் வீட்டுக்கடன் வாங்கி ஒரு வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளலாம். எப்படி?

தற்போது நீங்கள் தரக்கூடிய வீட்டு வாடகையில் ஏற்படும் மிச்சம்,  சந்தையில் ஏற்படும் விலை வீழ்ச்சி, வீட்டுக்கடன் வட்டி குறைப்பு, கடனில் கிடைக்கப்போகும் வரிச்சலுகைகள் - இந்த நான்கு விஷயங்களே நீங்கள் வங்கியில் வாங்க போகும் வீட்டு கடன் தவணைக்கு ஈடாக இருக்கும்.

வரும் காலத்தில் வீட்டின் மதிப்பு கூடுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் வீடு இலவச இணைப்பு மாதிரிதான். எல்லாவிற்கும் மேலாக, உங்களுக்கு சொந்தமான வீட்டில் இருக்கும்போது கால் மேல் கால் போட்டு நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். யாரும் காலிபண்ணி போகச் சொல்ல மாட்டார்கள்.

Home-Loan-tax-benifits-tamil

உயிருள்ள மட்டும் அது பூவுலகில் உங்கள் சொர்க்கம்தான். பரலோக சொர்க்கத்துக்கு போகுமுன் மறக்காமல் உயில் எழுதி வைக்கவும். ஒரு விஷயம். பொதுவாக அரசாங்கம் அப்படி ஒன்றும் இலவச விருந்து போடாதே? எதற்கு நாம் வீடு வாங்குவதற்கு, அரசு தனக்கு வரவேண்டிய வரி வருமானத்தில் சலுகை தரவேண்டும். இதில் உள்குத்து எதுவும் இருக்கிறதா?

ஒரு வீட்டின் கட்டுமானம் 250 வகையான தொழில்களுக்கு அடிப்படை தேவையை உருவாக்குகிறது ( TMT கம்பிகள் முதல் சிமெண்ட் வரை) ஒரு வீடு சராசரியாக 1050 வேலை நாட்களுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான முறைசாரா தொழிலாளர்களுக்கு, புலம் பெயர் சகோதரர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருகிறது. மனிதனின் மூன்று அடிப்படை தேவைகளில் பெரும் செலவு பிடித்த ஒன்றை அவரே பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது.

இதனால் வீடு வாங்குவதை ஊக்குவிக்க பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதே காரணத்தால்தான் வீட்டுக் கடன்களுக்கு, தனி நபர் வருமான வரி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் உங்களுக்கு வரிவிலக்கு கிடைக்கிறது.

2020 ஆம் வருடம் அரசு அறிவித்த புதிய வருமானவரி விருப்ப திட்டத்தை (Option II) தேர்வு செய்வதில் கவனமாக இருங்கள். சில ஆண்டுகளில் அது சேமித்தலுக்கான உங்களின் ஊக்கத்தை தகர்த்துவிடும்.

வீட்டுக் கடனில் வரி சலுகை:

வீட்டை வாங்க / கட்ட இரண்டில் எதற்காகவும் வீட்டுக் கடன் வாங்கலாம்.
கடன் வாங்கப்பட்ட நிதியாண்டின் முடிவில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் வீட்டின் கட்டுமானம் முடிக்கப்பட வேண்டும். வீட்டுக் கடனுக்காக நீங்கள் EMI செலுத்துகிறீர்கள் என்றால், அதில் இரண்டு கூறுகள் உள்ளன - வட்டி திருப்பிச் செலுத்துதல் மற்றும் அசல் திருப்பிச் செலுத்துதல்.

வீட்டுக் கடனில் வட்டிக்கான வரி சலுகை:

• கடன் EMI -யின் வட்டி பகுதிக்கு Sec24 இன் கீழ் உங்கள் மொத்த வருமானத்திலிருந்து அதிகபட்சமாக ரூ2 லட்சம் வரை விலக்கு கோரலாம். இது ஒரு பெரிய சலுகை.

• உங்கள் சொந்த உபயோகத்துக்கு வீட்டில் குடியேறிவிட்டிர்கள் என்றால் செலுத்தப்படும் வட்டிக்கு ரூ .2 லட்சம் வரை வரி சலுகை.

• வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால் இந்த மேல் வரம்பு இல்லை. ஆனால் வீட்டு சொத்து (House Property) என்ற பிரிவின் கீழ் ஒட்டுமொத்த சலுகை ரூ.2 லட்சத்திற்கு மட்டுமே.

• வீட்டின் கட்டுமானப் பணிகள் முடிந்த ஆண்டிலிருந்து இந்த விலக்கை நீங்கள் பெறலாம்.

இன்னும் கட்டுமானம் முடியவில்லை. ஆனால் வீட்டுக் கடனுக்காக வட்டி செலுத்தினால் சலுகை உண்டுமா?

சென்னையில் 2020–21ல் எதாவது அடுக்ககத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியிருந்தீர்கள் எனறால் அநேகமாக இன்னும் கட்டி முடித்து சாவியை கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் நீங்கள் EMI களை செலுத்திக்கொண்டிருப்பீர்கள். இந்த விஷயத்தில் என்ன சலுகை?

இந்த மாதிரி செலுத்தும் வட்டி தொகைக்கு கட்டுமானத்திற்கு முந்தைய வட்டி (pre-construction interest) என்று பெயர். கட்டுமானம் முடிந்த ஆண்டிலிருந்து தொடங்கி ஐந்து சம தவணைகளில் இந்த வட்டிக்கு (அதிகபட்ச லிமிட் ரூ.2 லட்சத்துக்குள்) சலுகை பெறலாம்.

அசலை திருப்பிச் செலுத்தினால் என்ன வரி சலுகை:

EMI -பகுதி பிரிவு 80C இன் கீழ் விலக்கு அளிக்கப் படுகிறது. அதிகபட்ச தொகை ரூ.1.5 லட்சம் வரை. ஆனால் 5 ஆண்டுகளுக்குள் வீட்டை விற்கக்கூடாது. அப்படி விற்றால் முன் வருடங்களில் நீங்கள் பெற்ற வரி விலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டு அந்தந்த வருடங்களில் உங்கள் வருமானத்தில் மீண்டும் சேர்க்கப்படும்.

முத்திரை வரி, பதிவு கட்டணங்களுக்கான சலுகை:

முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணங்களுக்கான விலக்கு அதே 80 சி பிரிவின் கீழ் அதே ஒட்டுமொத்த வரம்பான ரூ .1.5 லட்சத்திற்குள் கோரிப்பெறலாம். இந்த வரிச்சலுகை முத்திரை வரி, பதிவு கட்டணங்களை கட்டிய ஆண்டில் மட்டுமே கோர முடியும்.

பிரிவு 80EEA இன் கீழ் கூடுதல் வரி சலுகை:

இது ஒரு கூடுதல் சலுகை. இந்த மார்ச் 2020ல் முடிய வேண்டியது. கொரோனா சலுகையாக இதை நீட்டித்திருக்கிறார்கள். வீட்டின் மதிப்பு ரூ.45 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சமாக ரூ.1,50,000 வரை தரப்படுகிறது. முக்கியமாக கடன் வாங்கப்பட்ட தேதியில், உங்கள் பெயரில் வேறு எந்த வீடும் இருக்கக்கூடாது
6. தம்பதிகள் இணைந்து வாங்கிய வீட்டுக் கடனுக்கான சலுகை

தம்பதிகள் கருத்தொருமித்து இணைந்து இருவர் பெயரில் வீட்டுக் கடன் வாங்கினால் இருவருமே வீட்டுக் கடன் வட்டிக்கு தலா ரூ.2 லட்சம் வரையிலும், அசலுக்கு தலா ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகை பெறலாம். இது ஒரு சூப்பர் மேட்டர். இந்த சலுகையை பெற இருவரும் கடனில் எடுக்கப்பட்ட சொத்தின் இணை உரிமையாளர்களாகவும் (co-owners of the property ) இருக்க வேண்டும்.

தம்பதிகள் இருவர் பெயரில் இணைந்து வாங்கிய வீட்டுக் கடனுக்கு என்று ஒரு தனிச் சலுகையும் அரசு அறிவித்தால் இன்னும் நல்லது.